Sunday, June 02, 2013

தம்பதியர் நட்பு நலம்

தம்பதியர் நட்பு நலம்

ஒருமுறை நான் TIDEL PARK ல் பணியிலிருந்தபொழுது என் சக ஊழியர்கள் பலர் காதலர்களாக இருந்தனர். சிலர் தங்களது காதல்களுக்காக நிறைய தியாகங்களைச் செய்தனர். சிலர் வீட்டின் அனுமதியுடன் திருமணம் செய்து கொண்டனர்.


 
அவர்களில் ஒருவர், என் குழுவில் என் கீழ் பணியிலிருந்த திருவாளர் எக்ஸ்.


அவது காதலானது தெய்வீகமானது என்பார். காதலிக்காக உருகுவார். என்னென்னவோ செய்வார். அவர்களின் காதலுக்கு மொழியும் இனமும் தடையாக இருந்தது.


 
பெரும்பாலான திரைப்படங்களில் வருவது போல் வாடகை வீட்டில் குடியமர்ந்த பொழுது அந்த வீட்டிலுள்ள பெண்ணையே காதலித்திருக்கின்றார். காதலுக்குக் கண் இல்லை என்பது எவ்வளவு நிதர்சனம் என்பது அங்கே மெய்யாகிக்கொண்டிருந்தது.
 

 
 
 

ஒரு முறை நான் ஒரு தமிழ்நாடு அரசு் நிறுவனத்தின் ப்ராஜக்ட் ஒன்றினை மேற்கொண்டிருந்தேன். அது அப்பொழுது தமிழக முதல்வரின் நேரடிக் கண்காணிப்பிலிருந்தது. ப்ராஜக்ட்டிலிருக்கும் தடைகளைவிட அங்கே நிலவிய உட்குழுக்களின் போரும், அரசியலும் இமாயலத் தடையாக அமைந்தது. எனவே கடுமையான உழைப்புடனும் மனிதர்களின் மனோபாவங்களையும் மேலாண் செய்ய வேண்டியிருந்தது. இது என் இயல்பிற்கு ஒவ்வாததாகவே அமைந்திட்டது. அப்படிப்பட்ட ஒரு இறுக்கமான காலைப் பொழுதினில் வாடிக்கையாளரின் இடத்தில் நானிருந்திட்டபொழுது மிஸ்டர் எக்ஸிடமிருந்து எனக்கு ஒரு அலைபேசியழைப்பு.

 
தான் அவசரமாய் இருவீட்டுப் பெற்றோர்களையும் எதிர்த்து ரகசியத் திருமணம் செய்து கொள்ளப்போவதாயும் என்னால் தன் திருமணத்திற்கு பதிவாளர் அலுவலகத்திற்கு வந்து சாட்சிக் கையொப்பமிட இயலுமா எனவும் கோரினான். அப்பொழுது பணி பளுவினால் அவனுக்கு உதவ இயலா நிலையிலிருந்தேன்.

எங்கள் பொது மேலாளரிடம் உரையாடினேன். அவர் ஐந்தாறு என் சக ஊழிய நண்பர்களுக்கு 2 மணிநேரம் மட்டும் அவசர விடுப்பு வாங்கிக்கொடுத்து பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பிவைத்து அந்தப் பையனுக்கு உதவிட்டார்.

மிஸ்டர் எக்ஸூம் திருமணம் முடிந்த அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் அலுவலகம் வந்துவிட்டார். அந்தப்பெண்ணும் (அவர் வேறு ஒரு நிறுவனத்தில் வேலை) அதே போல் அவது அலுவலகம் சென்றுவிட்டார். எல்லாம் அலைபாயுதே திரைப்படம் செய்த லீலை..!

மாலையில் அலுவலகம் முடிந்ததும் எக்ஸ், தான் குடியிருக்கும் அந்த சேவல் பண்ணைக்கும்(திருவல்லிக்கேணி மேன்ஷன்), அவது மனைவி எப்பொழுதும் வழக்கமாய் செல்வதைப்போல் தன் வீட்டிற்கும் சென்றுவிட்டார். சில நாட்களில் சொற்ப வாடகையில் வீடுஅமர்த்திக்கொண்டார். ஆனாலும் அப்பெண் தன் தாய் வீட்டில்; இவர் இங்கே. சனி, ஞாயிறுகளின் பகல்வேளைகளில் மட்டுமே அவர்கள் திருட்டுத்தனமாகக் குடித்தனம் நடத்த முடிந்தது. சிறிது நாட்களில் பெற்றோர்களை எதிர்த்துக்கொண்டு அப்பெண் இவருடனேயே தங்கிவிட்டார்.

காதலுக்குத்தான் எத்தனை சக்தி...!என் நான் நினைத்துக்கொண்டேன். அவர்களின் காதலில் உயிர் இருந்தது; தியாகம் இருந்தது; உறுதி இருந்தது. மிகப் பெருமையாகவே இருந்தது.பாரதிராஜாவின் படங்களில் வருவதைப் போல் ஊ..லலலா....ஊ... லலலா.... என தேவதைகள் நடனமாட அவர்களின் வாழ்வு இனிமையாகவே ஆரம்பமாயிற்று.

சில நாட்களிலேயே அங்கே விரிசல் ஏற்பட்டது…!

ஒவ்வொருவரும் மாறி மாறி புகார்களை மற்றவர் மீது சரமாரியாக வீசினர். அவர்களின் விரிசல்களை சரி செய்ய நினைத்தேன். அவர்கள் எப்பொழுதும் போல் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என விரும்பினேன்.

அவர்களின் வாதங்களை அலசிய பொழுது அந்தப் பெண் அடிக்கடி சொல்வது இதுதான். அவர் தன் மீது உண்மையான காதல் செலுத்தவில்லை. தான் ஏமாற்றப்பட்டதாயும் அவன்தன் மீது முன்பு போல் உண்மையான காதலைச் செலுத்தவில்லை எனவும் புகார் கொடுத்தார்.

'நோ...நோ....ஹி இஸ் நாட் த ப்ரிவியஸ் ............. (மிஸ்டர் எக்ஸின் பெயர்). கல்யாணத்திற்குப் பிறகுதான் அவனது சுயரூபம் தெரியுது….’

'தோ... பார்.... போன வாரம்தான் அந்த ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் உனக்கு விருந்தளித்தேன்....ஏன் உங்கப்பன் கூட அப்படி பண்ணியிருப்பானா என்பதுடவுட்டே.... அதுக்கு முந்தின வாரம்தான் உன்னை ஊட்டிக்கு அழைத்துச் சென்றேன்...xxxxxx ரூபாய் செலவழித்தேன்....உன் மீது அன்பில்லாவிட்டால் செலவு செய்திருப்பேனா...? அதற்கு முந்தைய வாரம்தான் லலிதா ஜுவல்லர்ஸில் லேட்டஸ்ட்டா வந்த அந்த நெக்லஸை xxxxx ரூபாய் கொடுத்து வாங்கிக்கொடுத்தேன்....உன் மீது அன்பில்லாமலா....?'

அப்பெண் வெடி மலையென வெடித்தேவிட்டார்.

"லவ் இருந்தா இப்டி கரெக்ட்ட்டா கணக்கெல்லாம் வச்சிருப்பீங்களா....? இவ்வளவு செலவு பண்ணினேன்னு சொல்லி என்னைக் கேவலப்படுத்தறீங்களே..."

நான் என்ன செய்யணும்…..?”

"இப்பல்லாம் நீங்க முன்ன மாதிரி இல்லை...." என தன் வேதனையைக் கொட்டினாள்.
எனக்கு பளிச் சென பிரச்சினையின் தீவிரமும் அதற்குண்டான தீர்வும் என் மூளையின் நியூரான்களில் உடனே ஒளிரியது. அடிப்படை மனோதத்துவம் புரிபட ஆரம்பித்தது.

மனிதர்கள் தங்களதுCommunicationஐ மூன்று விதமாக வெளிப்படுத்துவர்.
1. Auditory எனப்படும் ஒலிவடிவினில் தகவல் பரிமாற்றம்.
2. Visionary எனப்படும் காட்சிவடிவினில் தகவல் பரிமாற்றம்
3.  Kinesthetic எனப்படும் உணர்ச்சிவடிவினில் தகவல் பரிமாற்றம்.
 
இங்கே இந்தப் பெண் Auditory Type Communication. இவர் எதையுமே ஒலிவடிவாகவே communicate செய்வது இவரது இயல்பு எனப்பட்டது. அந்தப் பையன் Visionary Type Communication. அவனது எண்ணம் சொல் செயல் எல்லாம் காட்சி வடிவாகவே இருந்தது.

Communication Mismatch எனப் புரிந்தது.

இதனால்தான் அவன் அவனது பாணியில் அன்பை அவளுக்கு நகை வாங்கி அழகு பார்த்ததன் மூலம் வெளிப்படுத்தினான். வெளியிடங்களுக்கு அழைத்துச்சென்று அன்பினை வெளிப்படுத்தினான். அன்பை காட்சி வடிவினில் வெளிப்படுத்தியிருக்கின்றான்.

ஆனால் அந்தப் பெண்ணோ எதையாவது பேசிக்கொண்டேயிருக்க வேண்டும் என்பதுடன் Kinesthetic என்ற உணர்ச்சிவடிவமும் கலந்த டைப்.

காதலில் அவன் தினமும் ஓராயிரம் முறை ஐலவ் யூ சொல்லியிருக்கின்றான். திருமணமானபின் அது விடைபெற்றிருந்தது்.

 
அவன் தினமும் காலையில் எழுந்தவுடன் ஐ லவ் யூ சொல்லிவிட்டு அலுவலகம் வந்தவுடன் அவசரமாகத் தன் மனைவிக்கு தொலைபேசியில் ஐ லவ் யூ சொல்லிவிட்டு தேனீர் இடைவேளையில் ஒரு ஐ லவ் யூ... மதியம்... இப்படி சொல்லிக்கொண்டிருந்தால் லலிதா ஜுவல்லர்ஸுக்கும், ஃபைவ் ஸ்டார் ஹோட்டலுக்கும், ஊட்டிக்கும் போக வேண்டியிருந்திருக்காது; கணிசமாய் அவனது பணப்பையில் பணம் மிச்சப்பட்டிருக்கும். உபாயம் தெரியவில்லை.

 
அதன் பின்னர் அவர்களது Communicationல் இருக்கும் இயல்பினை உணர வைத்து தற்பொழுது நல்விதமாக இனிமையாக தங்களது வாழ்வினை மேற்கொண்டுவருகின்றனர்.
இனிமையான இல்லறம் அமைய என் மூளையின் நியூரான்களில் உதித்த சில ஆலோசனைகள்:

தம்பதியருக்கிடையே நட்பு நலம் சிறக்க

1. காலையில் எழுந்ததும் தங்களது வாழ்க்கைத் துணையினை ஆழ்மனதிலிருந்து, 'வாழ்க வளமுடன்...' என்று வாழ்த்துங்கள்.

2. உண்மையான நேசமும் அன்பும் வெளிப்பட்டுக்கொண்டேயிருக்கட்டும். நான் அன்பாக இருப்பது அவளுக்கு/அவனுக்குத் தெரியாதா…? என அலட்சியமாக இருக்க வேண்டாம்.

3. சினம் தவிர்த்தல் நலம். இனிமையான வார்த்தைகளைப் பயன்படுத்துங்கள்.

4. ஒருவரை ஒருவர் வாழ்த்திக்கொள்வதும் பாராட்டிக்கொள்வதும் அவசியம்.

5. தியாகமும் சகிப்புத் தன்மையும் ஒருவருக்கொருவர் தங்களது வாழ்க்கைத் துணைக்காக விட்டுக்கொடுத்தலும் (கற்பினைத் தவிர) அழகான தாம்பத்யம் அமைய வழிவகுக்கும்.

6. காலையிலும் மாலையிலும் இருவரும் சேர்ந்தே கூட்டுத்தவம் அல்லது இறைவழிபாடு இவற்றினில் ஈடுபடுவது இருவரையும் ஒரே புள்ளியில் இணைக்கும்; நட்பு நலம் வலுக்கும்.

7. தினமும் இரவினில் துயிலும் முன்னர் தம்பதியர் தங்களது வாழ்க்கைத் துணையிடம் மனம் விட்டுப் பேசிவிட்டுத் தூங்கலாம். அதில் அன்பும் அக்கரையும் கரிசனமும் இருக்க வேண்டும்.

8. எந்த சூழ்நிலையிலும் மற்றவர்களின் முன் உங்களது வாழ்க்கைத் துணையை மனம் நோகும்படி பேச வேண்டாம். தவறிருப்பின் அவரைத் தனியே அழைத்துச் சென்று பக்குவமாகச் சொல்லிப் புரியவைக்கலாம்.

9. வாழ்க்கைத் துணையிடம் ஆயிரம் குறைகள் இருக்கலாம். உங்களது எதிர்பார்ப்புகள் ஏமாற்றங்களாகியிருக்கலாம். ஆனாலும் மனம் விட்டுப் பேசி நடுநிலையில் பிரச்சினைகளை அலசி ஆராய்ந்து எது சரியோ அதை எடுத்துக் கொள்ளும் மனப் பக்குவம் வந்திருந்தால் வெளியுலகப் பிரச்சினைகள் என்ன செய்துவிடமுடியும்…?

10. ஒரு நாள் முழுதும் மனைவிக்கு ஓய்வு கொடுத்துவிட்டு அந்த வேலை முழுதும் கணவன் அன்பாக செய்தால் அந்த மனைவியின் மனம் எப்படி குளிர்ந்து போகும் எனப் பரீட்சித்துப் பார்த்துத் தெளிவுறலாமே ?

அன்பே ஆணிவேர்,அது இதயத்தின் ஆழத்திலிருந்து பிறக்கட்டும். அனைத்து உயிர்களிலும் உயிரற்றவைகளிலும் கடவுள் துகளைப் பார்க்கலாம்.

வனத்தில் வாழும் விலங்கினங்களே அன்பிற்கு அடிபணியும்பொழுது மனிதர்கள் அதுவும் வாழ்க்கைத் துணை எம்மாத்திரம்? சினம் தவிர்த்து காதலுடனும் அன்புடனும் பண்புடனும் ஒவ்வொரு தம்பதியரும் வள்ளுவர்– வாசுகி போல் வாழ்வது 200 % சதவீதம் சாத்தியமே.

அருட்பேராற்றல் கருணையினால் அனைவரும் உடல்நலம், நீளாயுள், நிறைசெல்வம், உயர்புகழ் மற்றும் மெய்ஞானம் ஓங்கி நீடூழி வாழ்க வளமுடன்,

4 comments:

KARTHIK said...

Excellent boss :-)

http://bharathidasanfrance.blogspot.com/ said...


வணக்கம்!

இல்லறம் என்றும் இனித்துத் தழைத்திட
நல்லுரம் அன்பென நல்கு!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

மதுமிதா said...

காதல் திருமணம் ஆனாலும் பெற்றோர் செய்து வைத்த திருமணமானாலும் இந்த நட்பு நலம் முக்கியம் ரிஷி :)

rishi said...

கருத்துக்கள் பதித்த அனைவருக்கும் இதயப் பூர்வமான நன்றிகள் !