தீபாவளியும் நானும்....
நான்
வளர்ந்தது சிவகாசிக்கருகே நாரணாபுரம் என்ற ஒரு கிராமம் என்பதால்
பட்டாசிற்குப் பஞ்சமே இல்லை. ஒவ்வொரு பட்டாசு ஆலையிலிருந்தும் எங்கள்
வீட்டிற்கு ஒவ்வொரு பார்சல் வந்து சேர்ந்துவிடும். ஏனெனில் கிராமத்தில்
என்னை வளர்த்த எங்கள் பெரியம்மா-பெரியப்பாவிற்கு மதிப்பும் மரியாதையும் அதிகம். அதனை
அழகாய் சிறு சிறு பார்சல்களாய் உற்றார் உறவினர்கள் தூரத்து
ஊர்களிலிருக்கும் மற்ற உறவினர்கள் வரை பகிர்ந்து கொடுக்கப்படும்.
எங்கள்
கிராமத்திலிருக்கும் சின்னஞ் சிறார்கள் அனைவரும் பள்ளி வார
இறுதிநாட்களிலும், காலாணடு, அரையாண்டு, ஆண்டுயிறுதித் தேர்வு
விடுமுறைநாட்களிலும் பட்டாசுத் தொழிற்சாலைகளுக்கும் தீப்பெட்டித்
தொழிற்சாலைகளுக்கும் கூலி வேலைக்குச் சென்று தங்களுக்குத் தேவையான
பணத்தினைத் தாங்களே ஈட்டிக்கொள்ளும் வழக்கம் தொன்றுதொட்டு வந்திருந்ததனால்
நானும் அங்கிருக்கும் அஜந்தா ஃபயர் ஒர்க்ஸ், ரத்னா கேப் ஒர்க்ஸ், சொங்கி
ஆபீஸ் (இது நாங்கள் வைத்த பட்டப் பெயர்; உண்மையான பெயர் மறந்துவிட்டது.) என
பெரிய பெரிய நிறுவனங்களில் குழந்தைத் தொழிலாளியாகப்
பணிபுரிந்திருக்கின்றேன். வீட்டில் வேலைக்குச் செல்லவேண்டிய நிர்பந்தம்
இல்லாத சூழலாய் இருந்தாலும் கூட சுற்றுப்புறச் சூழலின் தாக்கத்தினாலேயே
பணிக்குச் சென்றேன். இதனால் எங்களைப் போன்ற சிறார்களுக்கு பல நன்மைகள்
ஏற்பட்டன.
எங்களுக்குத்
தேவையான துணிமணிகளையும் பாடப்புத்தகங்களையும் வீட்டிற்குத் தொந்தரவு இன்றி
நாங்களே விலைகொடுத்து வாங்கிக்கொள்வோம். பல சமயங்களில் வீட்டின் சிறு
செலவுகளுக்கும் நானே பணம் கொடுத்திருக்கின்றேன் என்றால் பார்த்துக்
கொள்ளுங்களேன். (அதன் பின்னர் கடையிலிருந்து வீட்டிற்குச் சாமான்கள் வாங்கி
வரும்பொழுது நான் கமிஷனடித்துவிடுவது வேறு விஷயம்.....!)
ஜவுளி
மூட்டையை சைக்கிளில் கட்டிக்கொண்டு பிரதி ஞாயிறன்றும் எங்கள்
கிராமத்திற்கு ஒரு பெரியவரும் அவரது நடுத்தர வயது மகனும் கடனுக்கு புதுத்
துணிகளை வழங்கிவிட்டு வாராவாரம் வசூலித்துவிடுவர். அவருக்கு நாங்கள்
ஞாயிற்றுக்கிழமைக்காரர் என்றே பெயர் வைத்திருந்தோம்.
நான்
ஒவ்வொரு பண்டிகைக்கும் அவரிடம் தூய வெண்ணிற பருத்தி ஆடைகளை முன்கூட்டி
சொல்லிவைத்திருந்து வாங்கிடுவேன். வெண்ணிற பருத்தி ஆடைகளுக்குக் காரணம்
எங்கள் வீட்டில் கதராடைகளே அனைவரும் விரும்பி அணிவர். பட்டு மற்றும் தோல்
உபயோகங்கள் அறவே கிடையாது. அவர் ஜீவகாருண்யங்களைக் கடைபிடித்திட்டதனால்
எனக்கும் அந்த இன்ஸ்பிரேஷன் வந்திருந்தது. எனக்கென்று
ஞாயிற்றுக்கிழமைக்காரருடைய நோட்டில் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டிருக்கும்.
ஆனால் நான் கடன் எதுவும் வைத்துக்கொள்வதில்லை. கடன் என்பது ஏனோ எனக்கு என்
சின்ன வயதிலிருந்தே பிடிக்காத ஒரு விஷயமாகிப் போனது. அஞ்சலகத்தில்
இதற்காகவே நான் சேமித்துவைத்திருப்பேன். காசு சேர்ந்தபின்னரே பண்டிகை
கொண்டாடுவது வழக்கம்.
என்
பட்டாசுத் தொழிற்சாலை அனுபவங்களின் தாக்கத்தினால் எழுதப்பட்ட சிறுகதையே
பிஞ்சு என்ற சிறுகதையாகும். அதில் கதாநாயகனான சிறுவன் சீனிவாசகனுக்கு முதல்
நாளில் நடக்கும் அவமானங்கள்.... ராக்கிங்.... வக்கிரங்கள் என அக்கதையில்
நடைபெறும் சம்பவங்கள் அனைத்துமே என் வாழ்வில் நடந்த உண்மைச்
சம்பவங்களே..... இக்கதை 1997 ஆம் ஆண்டு மிகச் சிறந்த சிறுகதைகளில்
ஒன்றாய்த் தேர்ந்தெடுக்கப்பட்டு திருப்பூரிலிருக்கும் ’சேவ்’ என்ற
அமைப்பானது ‘பிஞ்சுக்கரங்கள்’ என்ற சிறுகதைத் தொகுப்பினை வெளியிட்டது.
பட்டாசுத்
தொழிற்சாலைகளிலும் ஏகப்பட்ட ராகிங். சிறார்களுக்கு வெளியே சொல்லொணா விதமான
கசப்பான அனுபவங்களே ஏற்படுகின்றன. ஆனாலும் அவை அத்தனையும் வாழ்க்கையின்
எதார்த்தங்களையும் மனிதனின் வக்கிரத்தினையும் படம் பிடித்துக் காட்டியது.
பின்னர் வாழ்க்கைக்கு நல்ல அடித்தளமாய் அமைந்தது.
முதன்
முதலில் டெசிகுத்து என்ற வேலையில் இருந்தேன், அதாவது வெடிகளுக்குத் திரி
செருகுதல். வெடிக்குழாய்களை ஒரு வட்டவடிவ ரிங்கினில் கிட்டித்து
வைத்திருப்பர். அதன் அடிப்பகுதி மண்ணும் வஜ்ஜிரமும் கலந்து மிகவும்
உறுதியாக இருக்கும். நடுப்பகுதியில் வெடிமருந்து வைக்கப்பட்டிருக்கும்.
மேல் பகுதி மருந்தினால் ஒரு டெசி பேப்பரினால் மூடப்பட்டிருக்கும்,. ஆணி
போன்ற ஒரு கூர்மையான ஆயுதம் ஒன்று தரப்படும். அருகிலிருக்கும்
வேப்பமரத்தடியினாலே உட்கார்ந்துகொண்டு ஒவ்வொரு வெடியாக வேகமாகத் துளையிட்டு
திரியினை பசையினில் நனைத்து வெடியினில் செய்த துளையின் உள்ளே திணித்து
காயவைக்கவேண்டும்.
சொல்லும்பொழுதும்
பார்க்கும்பொழுதும் மிகவும் எளிதாக இவ்வேலை தெரிந்தாலும் நேரம் செல்லச்
செல்ல உயிர் போகுமளவிற்கு விரல்களும் முதுகும் வலி எடுக்க ஆரம்பிக்கும்.
காலையிலிருந்து மாலைவரை உட்கார்ந்த நிலையிலேயே வேலை செய்யவேண்டும்.
பின்னர்
டெலிஃபோன் வெடிக்கு அந்த சதுர டப்பா செய்து கொடுத்தேன். அப்படி ஒரு
கட்டுக்கு 144 கொண்ட பெட்டிகள் கொண்ட 10 கெட்டுக்களை செய்து கொடுத்தால் 10
பைசா கிடைக்கும். சில சமயங்களில் தீப்பெட்டித் தொழிற்சாலைக்கு பணிக்குச்
செல்வோம். இதில் ஒரு வசதி என்னவெனில் பாடசாலை முடிந்ததும் மாலையில்
சிறிதுநேரம் ஓய்வாக சென்று வேலை செய்யலாம். 50 சக்கைகளைக் கொண்ட ஒரு கட்டை
அடுக்கினால் 3 பைசா கிடைக்கும். அதாவது மருந்தில்லா வெறும் தீக்குச்சிகளை
சக்கையில் வரிசையாக அடுக்கி அதனை இரு புறமும் கம்பி போன்ற சட்டத்தினால்
இணைக்கப்பட்டிருக்கும் ஒரு அமைப்பினுள் அடுக்கி அப்படி 50 சக்கைகளையும்
அடுக்கினால் அது ஒரு கட்டை எனப்படும். அப்படிச் செய்தால் 3 பைசா
கிடைக்கும். 12 தீப்பெட்டிகளை வைத்து மடித்து பாக் செய்வது டஜன் மடக்குதல்
எனப்பெயர். அப்படி 12 தீப்பெட்டி டஜன்கள் செய்தால் 1 குரோஸ் எனப்படும். ஒரு
குரோஸுக்கு 3 பைசா கொடுக்கப்படும். நான் அதில் வேகமாயும் திறமையாயும்
மடிப்பதில் கொஞ்சம் நிபுணத்துவம் பெற்றிருந்தேன்.
யானை
வெடி, ஏரோப்ளேன் வெடி என கொஞ்சம் கொஞ்சமாய் உயர்ந்தேன். பட்டாசுத்
தொழிலில் உயிருக்கு எந்த உத்திரவாதமும் இல்லை. என் கண் முன்னாலேயே பிணம்
ஆனவர்களின் அந்த சரிதம் இன்னும் என் கண்களில் நிழலாடுகின்றது. இரவினில்
இரண்டாம் ஆட்டம் சினிமா முடித்துவிட்டு அந்த்த் தொழிற்சாலைகளின் பக்கம்
வரும்பொழுதெல்லாம் விபத்தில் சிக்கி மரணித்தவர்கள், ‘தண்ணி....தண்ணி......’
என்று கதறி அலறுவதைப் போன்ற பிரமை மனதினில் அனைவருக்கும் எழும். நேற்றுவரை
நம்முடன் பேசித் திரிந்தவர் இன்று இல்லையெனில்.....?
அப்பொழுதெல்லாம்
காடுகளாக இருந்தது. எங்களைப் போன்ற விவசாய விளைநிலங்களில் தான்
தொழிற்சாலைகளின் கட்டுமானங்கள் அமைந்திருந்தன. வானம் பொய்த்துப்போனதும்
பட்டாசுத்தொழிற்சாலைகளின் வரவுகளினால் அன்றாட வாழ்க்கையை நகர்த்த
விவசாயிகளும் விவசாய வேலைகளை மறந்து பட்டாசுத் தொழிலை மேற்கொள்ள....
காலப்போக்கில் கந்தக பூமியாகி.... பட்டாசுக் கழிவுகளின் புகை பட்டு பட்டே
விளை நிலங்கள் பொய்த்து அவை நல்ல விலை நிலங்களாக மாறிப்போயிருந்தன. அதன்
ஏக்கத்தினையே, கோபத்தினையே ‘லயம்’ என்ற சிறுகதையில் வடித்திருந்தேன்.
சிவகாசியைப்
பொறுத்தவரை என்னுடன் படித்த மற்ற மாணவர்கள் எவரும் பள்ளியிறுதியினைத்
தாண்டவில்லை. சிலர் ஐந்தாம் வகுப்புடன் கல்விக்கு டாட்டா, சிலர் ஆறு, சிலர்
ஏழு, சிலர் எட்டு. அதுதான் பெரும்பாலும் அன்றாடங்காய்ச்சியின் வீட்டில்
நடந்தது. இன்னும் சிலர் வசதியிருந்தாலும் சுற்றுப்புறச் சூழலினால்
தாக்கப்பட்டு கல்வியினைத் தொடர இயலாது பட்டாசுத் தொழிலிலோ அல்லது அச்சுத்
தொழிலிலோ அல்லது தீப்பெட்டித் தொழிலிலோ என எதுவோ ஒன்றில் தடம்
புரண்டுவிடுகின்றனர். படிப்பறிவுள்ளவர்களின் வீட்டில் மட்டும் கொஞ்சம்
கல்லூரி வரைப் படிக்கமுடிகின்றது. அதன் விகிதமும் 0.01 சதவீதமே.
தெய்வாதீனமாக நான் அங்கிருந்தால் படிப்பினைத் தொடரமாட்டேன் என எண்ணிய என்னை
வளர்த்த பெரியவர்கள் எட்டாம் வகுப்பில் சரியாக என் பெற்றோரிடம்
ஒப்படைத்தனர். அம்மா அப்பா இருவரும் வாத்தியார்கள். அதுவும் அம்மா
தலைமையாசிரியர். வாத்தியார் மகன் மக்கு என்ற ஆகம விதிகளின் படி நானும் அடி
மக்குவாகவே இருந்தேன்.
தீபாவளி
அன்று அதிகாலையிலேயே எழுப்பி கதறக் கதற தலையிலிருந்து பாதம் வரை ஒரு
பாட்டில் நல்லெண்ணெய் தேய்த்து ஒரு அரை மணிநேரம் ஊறவைத்து கங்கா ஸ்நான்
செய்விப்பார். பலகாரங்களை நைவேத்தியம் செய்வதற்காக சுவாமி கூடத்தில்
வைத்திருப்பர். யாருக்கும் தெரியாமல் நான் அதில் நைசாக சிலவற்றை லபக்கி
விடுவேன்.
கைத்துப்பாக்கியில்
சுருள் கேப்பினைத் திணித்து கள்ளன் போலீஸ் விளையாடுவோம். அதில் திருடனாய்
இருக்கவே அனைவரும் போட்டி போடுவோம். பின்னர் காலைச் சிற்றுண்டியை வீட்டில்
திட்டுவார்களே என்பதற்காக கொறித்துவிட்டு பெரிய வெடிகளை எடுத்துக்கொண்டு
ஓடுவோம். மிகவும் ஜாக்கிரதையாக வெடித்தாலும் கூட எப்படியாவது ஒரு சிறு
அசம்பாவிதமாவது அன்று நடந்துவிடும். புது சட்டையில் கங்கு பட்டு
கருகிவிடுதல், கையில் சின்ன தீக்காயம், மயிரிழையில் உயிர் தப்புவது என.....
நீளும்....
அப்பொழுதெல்லாம்
நாங்கள் ரஜினி ரசிகர்களாயிருந்தோம். காலையில் 10 மணி ஆட்ட்த்திற்கு 9 மணி
சுமாருக்கே என் வயதொத்த சின்னஞ் சிறார்கள் எங்கள் கிராமத்திலிருந்து 2 மைல்
தொலைவிலுள்ள சிவகாசிக்கு கால்நடையாகவே காற்றெனப் பறந்துவிடுவோம். எல்லாம்
திரைப்படம் செய்யும் மாயம். டிக்கட் எடுக்க எங்கள் பட்டாளம் சினிமா
கவுண்ட்டரிலுள்ள கூட்டத்தினுள் நுழைந்து சிக்கிக்கொள்வோம். மூச்சுத்
திணறும். உயிர் போகும். ஆனாலும் அப்படி சாதிப்பதில் ஒரு
திருப்தி.....மகிழ்ச்சி..... சாப்பாடு மறந்திருப்போம். அன்று முழுதும் ஊர்
சுற்றிக்கொண்டிருப்போம். மீண்டும் கிராமத்திற்கு வந்து வெடி விடுதல்...
கள்ளன் போலீஸ்.... இரவினில் நடைபெறும் வானவேடிக்கை கண்கொள்ளாக் காட்சி.....
1 comment:
I was mad about deepavali in my childhood ....enjoyed your post...really good ...!!!
Post a Comment