சிறுகதை: பயணம்...
- ரிஷி ரவீந்திரன்
மருத்துவன் நாடி
பார்த்துவிட்டு, ‘கிழவி அமாவாசை தாண்டாது’ என உறுதிபடுத்தினான். ஊரும் உறவும் வீட்டினில்
குடிபுகுந்து ஒரு வாரம் ஆகியிருந்தது. அவரவருக்குத் தெரிந்த கட்டுக் கதைகளை சுருதி
கூட்டி சுவாரசியமாக அபிநயத்துடன் சொல்லிக்கொண்டிருந்தனர். கடந்த ஒரு வாரமாக தினமும்
தாடி ராமசாமி மாமா ராமாயணம் பாராயணம் செய்துகொண்டிருந்தார். தேநீரும் உணவும் நேரம்
தவறாமல் ஊர் உறவுகளுக்குக் கிடைத்தன.
கடைப் பெண் தன்
குழந்தைகளை வளர்க்க கிழவியை அழைத்துச் சென்றார். எல்லாம் நல்லபடியாய் போய்க்கொண்டிருந்த
வேளையில்தான் அந்த அசம்பாவிதம் நிகழ்ந்தது. வெளியே சென்றிருந்த தன் பெண்ணின் கணவர்
வீடு திரும்பி, கதவினைத் தட்ட, பாட்டி வீட்டினுள்ளிருந்து கதவினைத் திறக்க முயல, தன்
பெண்ணின் கணவர் எதிர்பாராவிதமாய் வெளியிலிருந்து கதவினை அதிக விசையுடன் தள்ள… கதவின்
செவ்வக வடிவ இரும்பு தாழ் நெற்றிப் பொட்டிலடித்து, அடுத்த கணமே பார்வை கொஞ்சம் கொஞ்சமாய்
மங்கியது. இரண்டொரு நாட்களில் முழு பார்வையும் பறிபோனது. மருத்துவமோ மின்சாரமோ பேருந்து
வசதிகளோ இல்லாத காலங்கள் !
ஆரம்பத்தில் அனைவரும்
இரக்கப்பட்டாலும் நாட்கள் நகர நகர பாட்டி அநாதரவானார். ’நடந்தால் நாடும் நட்பு.. படுத்தால்
பாயும் பகை..’ என்ற யதார்த்தினை மெல்ல மெல்ல பாட்டி உணர்ந்தார். யெளவன காலத்தில் எலுமிச்சை
நிறத்திலிருந்த தன் தோற்றம் இப்பொழுது எப்படி இருக்கும் ? கண்களிரண்டும் உள்ளே தள்ளி
தான் அருவருப்பாய் இருப்போமோ?
ஒரு முறை உணவு உண்ண
மறுத்த ஒரு பாப்பாவின் அன்னை, ’ நீ சாப்பிடாவிட்டால் கெழவியிடும் உன்னைப் புடிச்சிக்
கொடுத்துவிடுவேன்’ என மிரட்டியது தன் காதுகளில் விழுந்தது. பாட்டிக்கு பாம்புக் காதுகள்.
தூரத்தில் வரும் சப்தத்தினை வைத்தே வருவது யார் எனக் கண்டுபிடிக்குமளவிற்கு செவித்திறனும்
அறிவுத்திறனும் கூர்மையடைந்திருந்தது.
பாட்டிக்கு இரண்டு
ஆண் இரண்டு பெண் குழந்தைகள். தீபாவளி, பொங்கலுக்கு வருடம் தவறாமல் முறை வைத்து பாட்டியின்
குழந்தைகள் புத்தாடை அணிவித்தனர். பாட்டிக்குப் பணிவிடை செய்ய பூச்சம்மா என்ற ஒரு அநாதரவான
பெண்மணியை நியமித்தனர்.
பேரக் குழந்தைகள்
பள்ளி விடுமுறை நாட்களில் கிராமத்திற்கு வரும்பொழுது, பாட்டி ஒவ்வொரு குழந்தையையும்
காரை வீட்டின் உச்சியில் பதிக்கப்பட்ட கண்ணாடியின் மூலமாய் ஊடுருவும் சூரிய ஒளியின்
கீழே நிற்கச் செய்து, உச்சியிலிருந்து பாதம்வரைத் தடவி மகிழ்வார். பேரக் குழந்தைகள்,
பாட்டியின் உருவ அமைப்பினைக் கண்டு அஞ்சி நடுங்குவர். வெங்காயம் உரித்தல், யாராவது
ஒருவர் மேற்பார்வையில் இட்லிக்கு மாவரைத்தல் எனத் தன்னால் இயன்ற எளிதான உதவிகளைச் செய்திடுவார்.
கடைப் பெண், சாங்கியத்திற்காகத்
தனக்கு வாங்கிவந்த தின்பண்டங்களை, பாட்டி உண்மையான அன்போடு தன் பேரக் குழந்தைகளுக்கு
பிரித்துக் கொடுப்பார். அதன் பின் பாட்டியின் முகத்தில் ஒரு மகிழ்ச்சித் தென்படும்.
பேரக் குழந்தைகளின் விடுமுறை முடியும்வரை பாட்டியின் முகத்தில் மகிழ்ச்சி ஊற்றெடுக்கும்.
குழந்தைகள் தன் அருகே வராவிட்டாலும்கூட தன்னிடம் யாருமே உரையாடாவிட்டாலும்கூட பாட்டியின்
மனதினில் எதோ ஒரு மகிழ்ச்சி குடியிருக்கும்.
பாட்டி, என்றுமே
’தன் நிலை இப்படி ஆகிவிட்டதே !’ என நினைத்து வருந்தியதே இல்லை. கண் பார்வை இழந்த ஆரம்பத்தில் பாட்டிக்கு இரவு எது
பகல் எது என நேரம் எதுவும் தெரியாமலிருந்தது. ஒரு நடைக் கம்பின் துணையோடு ஒவ்வொரு அடியினையும்
ஆராய்ந்து பாதுகாப்புடன் எடுத்து வைத்து நடை பயின்றார். பெரும்பாலான நேரங்கள் தன் கடந்த
கால வாழ்க்கையின் பசுமையான நினைவுகளை மனதினில் ஓட விட்டுப் பார்ப்பதால் பாட்டிக்கு
நேரம் போவதே தெரியவில்லை. சலிப்பு ஏற்பட்டதில்லை. வானொலியோ தொலைக்காட்சியோ தொலைபேசியோ
மின்சாரமோ இல்லாத காலங்கள் அவை.
பாட்டியைப் பராமரிக்கத்
தனி கூரைவீடு. பரந்து விரிந்த மிகப்பெரிய பண்ணை வீட்டினில் ஒரு ஓரமாய் செவ்வக வடிவினில்
சின்னதாய் ஒரு கூரைவீடு. நாரினால் வேயப்பட்ட ஒரு கட்டில். ஒரு லோட்டா. அலுமினிய சாப்பாட்டுத்
தட்டு. மூக்குப் பொடி டப்பா. ’குரு’ பல்பொடி டப்பா. இதுதான் பாட்டியின் சொத்து.
நெற்றியில் வட்டமாய்
சின்ன குங்குமப் பொட்டளவில் இயல்பாய் ஒரு மச்சம். வெள்ளைப் புடவையில் அவரது எலுமிச்சை
நிறமும் சிவப்பு நிறத்தினில் நெற்றியில் நீண்ட ஒரு கோடாய் வைணவ சின்னமும் தரித்து பளிச்
சென இருப்பார்.
நாலாயிர திவ்யபிரபந்தமாகட்டும்,
திருப்பாவையாகட்டும், ராமாயணமாகட்டும்… மடை திறந்த வெள்ளமாய் அவரிடமிருந்து கொட்டும்.
பாட்டியிடம் யாருமே
பேச மாட்டார்கள். ரேஷன் வைத்து நாளொன்றிற்கு அதிகபட்சமாய் இரண்டொரு வார்த்தைகள். பணிவிடை
செய்யும் பூச்சம்மா மட்டும் அவ்வப்பொழுது பாட்டியிடம் பேசுவார். வீட்டினில் வளர்த்த
நாய் பூனை கோழிகள் பசுக்கள் இவைகளெல்லாம் பாட்டியிடம் ஒரு வகையான இணக்கமான புரிதலுடனும்
பாசத்துடனும் இருந்தன. அவையவைகளின் பாஷையில் அவைகள் பாட்டியுடன் உரையாடும். யாவருக்கும்
புரிபடாத எதோ ஒருவகை இணைப்பு அவைகள் பாட்டியிடம் கொண்டிருந்தன.
வேடிக்கை பார்க்க
வந்த சிறார்களை, காகங்களை விரட்டுவது போல் பெரியவர்கள் விரட்டிக் கொண்டிருந்தனர்.
’எடுபிடி வேலைகளுக்கு மட்டும் தங்களைப் பயன்படுத்திக் கொண்டு தேவையில்லாத சமயங்களில்
தூக்கியெறியப்படுகின்றோமே’ என அவர்களின் மனதினுள்
எண்ண அலைகள் மோதிக்கொண்டிருந்ததை பெரியவர்கள் யாரும் சட்டை செய்ததாய் தெரியவில்லை.
படுக்கையிலிருக்கும்
கிழவி, பேச்சு வராமல் தன் கைகளால் அசைத்து எதோ ஒரு பாஷையில் என்னவோ ஒன்றை சொல்ல கிழவி
யத்தனிக்கின்றது. ஒவ்வொருவரும் கிழவியின் உடல் மொழிக்கு ஒவ்வொரு அர்த்தங்களைக் கற்பிக்கின்றனர்.
‘பாட்டியின் ஆன்மா,
லட்சுமியின் குழந்தைகளைப் பார்க்க ஏங்கித் தவிக்கின்றது. அதனால்தான் இன்னும் உயிர்
பிரியவில்லை. உடனே லட்சுமிக்குத் தகவல் சொல்லி குழந்தைகளோட அழைச்சிட்டு வாங்க’ என்றார்
டாங்கி அழகர்சாமி மாமா.
ஆளுக்கு ஒரு பக்கமாக
ஊர் உறவுகளுக்குத் தகவல் சொல்லக் கிளம்பிக்கொண்டிருந்தனர். சீனிவாச மாமாவும், கணேசன்
அண்ணனும் வெகு தொலைவிலிருக்கும் ஒரு அரசு பள்ளியொன்றில் பணியிலிருக்கும் .பாட்டியின்
கடைப் பெண்ணிற்குத் தகவல் சொல்லக் கிளம்பினர். இருட்டடையும் முன்னரே சிவகாசி டெவுனுக்கு
வேகமாய் நடை போட்டனர். அங்கிருந்து பஸ் பிடித்தால் லட்சுமி பணிபுரியும் ஊருக்கு இரவினில்
சென்றுவிடலாம். இரவு ஏழு மணிக்கு ஒரு த்ரூ பஸ் இருக்கின்றது. கடைசி பஸ். விருதுநகர்
சென்று அங்கிருந்து மேலும் பயணித்தால் அப்பயநாயக்கன்பட்டி. த்ரூ பஸ் அங்கே சென்றடையும்பொழுது சுவர்க்கோழிகளும்
ஆந்தைகளும் செயல்பட ஆரம்பித்திருக்கும்.
தாடி ராமசாமி மாமா
பாட்டியின் மரணமடையக்கூடிய நேரத்தை எதிர்நோக்கி கவலையுற்றார். அடைப்பு நட்சத்திரத்தில்
மரணித்தால் பிணத்தை வாசல் வழியாக எடுக்க இயலாதே !. தனிஷ்டா பஞ்சமி நட்சத்திரங்களில்
மரணித்தால், கூரையைப் பிரித்து அதன் வழியாகவோ அல்லது சுவற்றினை இடித்து அதன் வழியாகவோதான்
பிணத்தினை எடுக்கவேண்டும் என்பது நியதி.
தனிஷ்டா பஞ்சமி
என்றழைக்கப்படும் நட்சத்திரங்களில் ஏற்படும் மரணம் அடைப்பு ஆகிவிடுகின்றது. ஆவிமூலமாகவோ,
கனவு மூலமாகவோ அல்லது ப்ரம்ம ராக்ஸத ரூபமாகவோ தோன்றி வீட்டிலுள்ளோர்களைப் பயமுறுத்தி
ஆறு மாதத்திற்குள் மரணப்படுகையில் தள்ளிவிடும் என்றொரு ஐதீகம். முக்தி பெற்ற உயிர்கள்
கபாலம் திறந்து சூரியன் வழியாக ஒளிவடிவான இறைவனை அடைகின்றன. ஆனால் முக்தி எட்டாத உயிர்கள்
மீண்டும் உடல் எடுக்க உடல்காரகனான சந்திரனையே அடைகின்றன என்றொரு நம்பிக்கை.
தனிஷ்டா பஞ்சமி
நட்சத்திரங்களில் மரணித்தவர்கள் எமலோகம் சென்றடைய இந்த அடைப்பு என்றழைக்கப்படுகின்ற
கால அவகாசம் தேவைப்படுகின்றது என கருடபுராணம் உறுதிப்படுத்துகின்றதே ? மருத்துவன் நாடி
பிடித்த கணக்கினை வைத்துக் கணித்தால், கிழவி பஞ்சமி நட்சத்திரத்தில்தான் மரணிப்பாரோ…?
என்ன பரிகாரம் செய்வது…? என்ற எண்ணவோட்டம் தாடி ராமசாமி மாமாவின் மனதினில் பெளர்ணமி
அலைகளாக ஆர்ப்பரித்துக்கொண்டிருந்தன.
ஊரின் எல்லையில்
ப்ளஷர் காரின் ஹார்ன் சப்தம் கேட்டு சின்னஞ்சிறார்கள் வழியும் மூக்கினை இடக்கையால்
வழித்துக்கொண்டு வலக்கையால் கீழிறங்கும் டவுசரை இழுத்துக்கொண்டே ஓடினர். பெரும்பாலான
டவுசரின் பின்பக்கங்கள் இந்திய வரைபட வடிவினில் கிழிந்திருந்தன.
லட்சுமி தன் குடும்பத்துடன்
வந்துவிட்டதாய் கூட்டம் அனுமானித்தது. பஜனை தாத்தா எதோ தயார் செய்ய கூடத்தினுள்ளே சென்றார்.
பாட்டி தன் காதுகளைக் கூர்மையாக்கினார்.
பேரக்குழந்தைகள்
ஐவரும் ஆஜர், அந்த இடமே இப்பொழுது சாவுக்கலையிலிருந்து
மங்களகரமாய் மாறியிருந்தது. உற்சாகமான அதிர்வலைகள் ஜனித்திருந்தன. பாட்டியின் முகத்தினில்
ஒருவித பரவசநிலை.
ஒரு வயது நிரம்பாத
கடைக்குட்டி வரதன் பாட்டியைக் கூர்மையாகப் பார்த்தான். பாட்டி இவன் பிறப்பதற்கு முன்பே
பார்வை இழந்தவர், வரதன் முகத்தில் புன்னகை, ”யார்ரா…இது….?” எனத் தன் பிஞ்சுக் கரங்களினால்
பாட்டியைத் தொட்டுச் சிரிக்கும்பொழுது பாட்டி மெய்சிலிர்த்துப் போனாள். பாட்டிக்கு
முத்தம் கொடுத்ததில் ஆயிரம் வாட் மகிழ்ச்சி ரேகைகள் ஜனித்தன. பாட்டியின் உயிர் ஒரு
வித லயத்தினில் ஆழ்ந்திருந்தது. இப்பொழுது முகத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் குடிகொண்டிருந்தது.
ஆழ்ந்த மெளனங்களுக்கிடையே பாட்டிக்கும் வரதனுக்குமிடையே ஒரு ஆழ்ந்த உரையாடல் நிகழ்ந்து
கொண்டிருந்தது. வரதனின் முகத்தினை பாட்டி காண இயலாவிடினும் மனதினுள் வரதனின் பிம்பம்
ஓடிக்கொண்டிருந்தது. வசீகரமான முகம். உயிரினை சுண்டி இழுக்கும் ஜீவகலையான ஒரு சிரிப்பு.
பாட்டியின் கைகளிலிருந்த ரப்பர் வளையல்களைப் பிடித்து விளையாடிக்கொண்டிருந்தான். தன்
கையில் கட்டியிருந்த காப்புடன் அதனை ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தான்.
மூத்தபேத்தி ரங்கநாயகிக்கு
எதோ ஒரு அசம்பாவிதம் நடக்கப்போகின்றது என்ற அனுமானம் ஏற்படுகின்றது. முகத்தில் சோகம்
மெல்ல மெல்லக் கவிழ்ந்து பிஞ்சு முகம் இறுகியது.
பஜனை தாத்தா கூடத்திலிருந்து
ஒரு தம்ளரில் பாலுடன் பிரவேசமானார். லட்சுமியின் முகம் நோக்கினார். உணர்வலைகள். ’உன்
அம்மா மரணமடையப் போகின்றார்’ என்று மனதின் மூலம் உணர்வலைகளினால் லட்சுமியுடன் உரையாடினார்.
மெளனமாய் ’கடவுளே என் தாய் மரணிக்கவேண்டாம்…” என லட்சுமியின் கண்களில் நீர்த்திவலைகள்
ஜனித்தன.
பஜனை தாத்தா பால்
தம்ளரினை மூத்த பேத்தி ரங்கநாயகியின் கையில் திணித்து பாட்டியின் வாயில் பால் மெதுவாக
ஊற்றும்படி செய்வித்தார். பால் டம்ளரிலிருந்து சீராக பாட்டியின் வாயில் விழுந்துகொண்டிருந்தது.
பாட்டியின் உயிர் ஒரு வித லயத்தினில் இசைவாய் உணர்ந்தது. பாலின் அளவும் வேகமும் சிறிது
சிறிதாகக் குறைய ஆரம்பித்தது. பாட்டியின் உயிரும் சிறிது சிறிதாக உடலினை விட்டு அமைதியாகப்
பிரிந்து கொண்டிருந்தது.
பஜனை தாத்தா, தாடி
ராமசாமி மாமா அனைவரும் கண்களை மூடி பாட்டியின் உயிர் பிரிவதினை மனதினால் உணர்ந்து கொண்டிருந்தனர்,
சோகம் அப்பியிருந்தது.
நன்றி: வல்லமை மின்னிதழ்.
http://www.vallamai.com/special/pongal/1878/
No comments:
Post a Comment