Thursday, November 29, 2012

லயம் - சிறுகதை.



லயம் - சிறுகதை  ரிஷி ரவீந்திரன்

’முத்தமிழ்’ 2007ஆம் ஆண்டிற்கான இலக்கியச் சிறுகதைப்போட்டியில் முதல் பரிசு வென்ற கதை

கோபால்சாமி. நூறைத் தாண்டிய வயது. பழம் பெரும் சுதந்திரப் போராட்ட வீரர். நீளமான வெண்பஞ்சுத் தாடி. தீர்க்கமான தீட்சண்யமான கண்கள். முகத்தில் ஒரு பிரம்ம தேஜஸ். புருவ மத்தியில் சின்னதாய் வட்ட வடிவில் குங்குமப் பொட்டு, தோளில் வெள்ளை நிறக் கதர்த்துண்டு,கையில் ஊன்றுகோல்,காந்தித் தாத்தாவின் மூக்குக் கண்ணாடி, ஆரோக்கியமான உடல்.

புள்ளியாக அந்த வீடு, பெரியவரின் பார்வையில் பட்டது. அதை நோக்கி நகர நகர அந்தப் புள்ளி விரிந்து ஒரு பெரிய புராதன வீடாக அதன் நிஜப் பரிமாணத்தை வெளிப்படுத்தியது. சில நூறு வருடங்களை உள் வாங்கிய காரைவீடு. இடிந்து கொண்டிருக்கும் கற்சுவர்கள். எஞ்சி நிற்கும் மதிற்சுவரில் கண்ணீர் போல எட்டிப் பார்க்கும் ஆழமான விரிசல்கள்.

ஆழ்ந்த வேர்கள் கொண்ட இச்சிதைவுகள் பொருள் தேடலில் வேட்கை கொண்ட சுயநலமான மனிதர்களின் தலைவிதியைக் காட்டுகின்றன. அகத்தேடல் இல்லாததினால் வாழ்வு இன்றும் ஆதிகாலம் போன்ற காட்டுமிராண்டி வாழ்வாகவே இருக்கிறது.

பர்மா தேக்கு மரங்கள் விட்டங்களாகவும் கதவுகள் மற்றும் ஜன்னல்களாகவும் உருமாற்றம் பெற்றிருந்தன. வீட்டின் வெளியே  மிகப்பெரிய நிலவெளி. அதற்கப்பால் கூரை சிதைந்து வானைப் பார்த்த மாட்டுத் தொழுவம்.

மதில் கற்சுவரை ஒட்டி இரண்டு வாவரசி மரங்கள். மாட்டுத் தொழுவத்தின் அருகில் பரந்து விரிந்து கிடக்கும் வீட்டுத் தோட்டத்தில் முளைத்திருந்த எருக்கஞ் செடிகளினூடே ஒரு சிதைந்த அரிக்கேன் விளக்கு. நீர்த்தொட்டியில் சருகுகள், சிறகுகள் குழுமியிருந்தன.

நிகழ்வுகளின் நிழல்கள் படிமங்களாகியிருந்தன-
ஒரு சரித்திர ஏட்டின் நைந்துபோன பக்கங்களாக.

காற்றின் உரசலால் ஒரு வாவரசி மரம் கற்சுவரை உரசி சலசலப்பை உண்டாக்குகிறது. வாவரசி மரங்களினூடே செல்லும் முணுமுணுக்கும் தென்றலில், ஒரு குலவைச்சத்தம் மெல்லியதாகக் கேட்கிறது. சப்தம் பெரிதாகிக் கொண்டே போகிறது………………………………….

பொங்கலோ…..பொங்கல்……”

பெரிய நிலவெளியில் அரிசிமாவினால் கோலம் போடப்பட்டிருந்தது. ஆங்காங்கே அதன்மீது பசுவின் சாணம் வைக்கப்பட்டிருந்தது. அதில் பூசணிப்பூ பூத்திருந்தது. செங்கற்கள், கோலத்தின் நடுவே ஆயுத எழுத்தாக்கப்பட்டிருந்தது. இதன் மீது மிகப்பெரிய மண்பானை வைக்கப்பட்டிருந்தது. வெளிப்புறத்தை வெள்ளையடித்து காவிக்கோடுகள் கிழிக்கப்பட்டு அழகான மங்களகரமான மண்பானையாக அது உருமாற்றம் பெற்றிருந்தது. பொங்கலுக்கென விசேஷமாக விளைவிக்கப்பட்டச் சிவப்பு நிற கார்போக அரிசியுடன் நாட்டுச்சர்க்கரையும் சேர்ந்து பொங்கிக்கொண்டிருந்தது.

அது ஒரு காலம்…………………………………………………

கும்மரபள்ளத்திலிருக்கும் இலந்தை மரக் கண்மாயும் சரி, எர்ர பள்ளத்திலிருக்கும் கண்மாயும் சரி வற்றியதே இல்லை. சிறுவர்கள் தட்டையான கல் அல்லது ஓட்டினை நீர்ப்பரப்பின் மீது நேர்த்தியாக விட்டெறிந்து இரண்டு மூன்று முறை நீரில் மோதி எம்பிக்குதித்தோடி அது உருவாக்கும் சலன அலைகள் ரம்மியமாக இருக்கும்.

நெல் சாகுபடி முடிந்து தைமாதக் கடைசியில் உளுத்தம் பயிர் விளைவித்தால் சித்திரை மாத இறுதியில் விளைச்சலை எடுத்து விடலாம். பின்னர் எள் சாகுபடி. மறுபடியும் ஆனி, ஆடியில் குறுவை சாகுபடி. வருடம் முழுவதும் கண்ணுக்கெட்டிய தொலைவு வரைப் பச்சைக் கம்பளம் விரிந்திருக்கும். மாடுகளின் எச்சங்களே உரங்களாயின.

மாட்டுத்தொழுவம் பசுக்களாலும், காளைகளாலும் எப்பொழுதும் நிரம்பி வழியும். மாடுகள், மேய்ச்சலை முடித்துவிட்டு மாலையில் வீடு திரும்பும்பொழுது அவைகள் தொலைவிலிருந்தே ம்மா… ‘ என்று அதன் மொழியில் தகவல் சொல்லும். வெள்ளை நாய் வெளிப்புற வாசலைத் தன் வாயால் கவ்வித் திறந்து அவைகளை வரவேற்கும்.

குழந்தைகள், பசும்பாலை ஒவ்வொரு உபாத்யாயர்களின் வீட்டிலும் பயபக்தியுடன் இலவசமாகவே ஊற்றி விட்டு வருவர். அண்டை அயலார்கள் மற்றும் உறவினர்கள் தங்களது விளைச்சலை பரிமாற்றம் செய்து கொள்வர். வணிகச்சிந்தனை இல்லாத காலங்கள்..!

பொங்கலன்று பசுமாடு ஈன்றால் மிகவும் விசேஷம். இராட்சஷ ஆண்டிலும் அப்படித்தான் நிகழ்ந்தது. அனைவருக்கும் மகிழ்ச்சி. கன்று மிகவும் அழகாக இருந்தது. தெருக்குழந்தைகள் அதை வாஞ்சையாக வருடி விட்டனர். புதுவரவுக்காக மட்டுமல்ல; பொங்கல் பண்டிகை அன்று பிறந்ததற்கும் சேர்ந்தே மகிழ்ந்தனர். பொங்கலன்று பிறந்தால் கன்று கிருஷ்ணன் கோவிலுக்கே சொந்தம்.

கன்றை வளர்த்து சலகை எருது பழக்குதல்என்ற சாங்கியம் முடிந்த பின்பே கோயிலில் விட முடியும். வளர்ந்த கன்றை மார்கழி மாதம் பிறந்ததும் ஊருக்குப் பொதுவான ஒரு இடத்திற்குக் காலில் சலங்கை கட்டி அழைத்து வரப்படும். இரவு உணவை முடித்தபின் மக்கள் அங்கே கூடுவர். ஆண்கள் காலில் சலங்கை கட்டியபடி , தாரை தப்பட்டை அடித்து நடனமாடுவர். மாடும் அவர்களைப் போலவே வளைந்து நெளிந்து அவர்களுக்குப் பின்னால் ஆடி வரப் பழக்கப் படுத்தப் படும். மார்கழி முழுவதும் பழக்கிய பின், தையில் மாட்டை அலங்கரித்து ஊர்வலமாக அழைத்துச் சென்று கிருஷ்ணன் கோவிலில் விடப்படும். அனைவரும் உற்சாகமாக இதில் பங்கு கொள்வர்.

வீட்டுத் தோட்டத்தில் வளர்ந்திருந்த எருக்கஞ்செடிகளினூடே கிடந்த சிதைந்த அரிக்கேன் விளக்கு, சூரியன் அதிகாலையில் விழிக்கும் முன் ஏரில் கட்டப்பட்டு உழுத நாட்கள். நீரும், சூரிய ஒளியும், நுண்ணுயிர் ஆற்றலும் நிலத்திற்கிருந்ததால் விவசாயம் செழித்திருந்தது. கண்களுக்கெட்டிய தூரம் வரை பசுமை.

குறிப்பாகத் திருத்தங்கல்லிலிருந்து நாராயணசாமி மற்றும் நாச்சியாரம்மாள் என்ற கடவுள்கள் இந்தக் கிராமத்திற்கு ஒவ்வொரு பங்குனி மாதமும் வருகை புரிவதை மிகவும் விமரிசையாகக் கொண்டாடுவர். ஒவ்வொரு வீட்டிலும் முறுக்குச் சுடுவது என்பது ஒரு சடங்காகவே நிகழும். காலப்போக்கில் இந்த விழாவானது முறுக்குச்சாமி விழாஎன்றே மருவிப் போனது.

பண்டிகைக்கு ஏழெட்டு நாட்களுக்கு முன்பிருந்தே பலகார வகைகள் தயாரிக்க ஆயத்தமாகிவிடுவர். அதற்கென ஒரு பெரிய வடைச்சட்டி உண்டு. இரண்டு மூன்று மனிதர்களின் உதவியோடு அடுப்பின் மீது அமர்த்தப்படும். பலகாரங்கள் தயாரானபின் முற்றத்தில் வைத்து அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்படும் பொழுது பண்ணைப் பணியாட்களின் முகத்தில் மகிழ்ச்சி, பிரவாகமெடுக்கும்…. விழா முடியும்வரை வீடு முழுவதும் ஊர் உறவு என கலகலக்கும்.

வீட்டிற்குள் இந்த ஊஞ்சல் கட்டிலில்தான் துயில்வது வழக்கம். அருகிலிருந்த ஜன்னலின் கம்பியில் ஒரு கயிற்றினைக்கட்டி அதன் மறுமுனையைக் கட்டிலில் இணைத்துக் கொண்டுத் தேவையான பொழுது தூளியை ஆட்டுவது போல ஆட்டிக் கொண்டு அனந்த சயனம் கொண்ட நாட்கள். மேலே ஏற ஒரு மடக்கு நாற்காலி.

கோடை காலத்தில் பரந்த நிலவெளியில் நிலா ஒளியில் அனைவரும் படுத்துக் கொண்டு, புராதனக் கதைகள், புராணக்கதைகள் என நித்திரை வரும் வரை காலட்சேபம் நீளும்.

பூதான் இயக்கத்தில் தீவிரமாயிருந்த பொழுது ஒருமுறை விநோபா இந்த வீட்டிற்குத்தான் வருகை புரிந்தார். தன்னுடைய எல்லா நிலங்களையும் பூதான் இயக்கத்திற்குத் தானம் செய்து விட்டார்.

வீடே அந்தத் தெருக் குழந்தைகளால் நிரம்பி வழியும். தனக்குக் குழந்தை இல்லையே என ஒரு நொடிப் பொழுதேனும் எண்ணி வருந்தியதில்லை. குழந்தைச்சோறு இந்த வீட்டில் மிகப்பிரச்சித்தம். தெருவிலிருக்கும் எல்லாக் குழந்தைகளுக்கும் இங்கிருந்துதான் குழந்தைச்சோறுஊட்டி வளர்க்கப்பட்டனர். சுவர் நிறைய சுதந்திரப் போராட்டத் தலைவர்களின் படங்கள் அலங்கரித்தன.

தீப்பெட்டி மற்றும் பட்டாசுத் தொழிற்சாலைகள் கிராமத்தை ஊடுருவி ஆட்கொள்ள ஆரம்பித்த பின், மெல்ல மெல்ல அது கந்தக பூமியாக மாறிப்போனதால் மழை பொய்த்தது. விளை நிலங்கள், விலை நிலங்களாக மாறிப்போனது.

வாவரசி மரங்களினூடே செல்லும் முணுமுணுக்கும் தென்றலில் குலவைச்சத்தம் கம்மலாகிக் கேட்டது. இப்பொழுது சப்தம் முற்றிலும் நின்று போயிருந்தது.

மனைவி மரணித்தபின், வளர்ப்பு மகனிடம் தஞ்சமடைந்தார். இப்பொழுது பேரனின் பராமரிப்பில் நகரில் வசிக்கின்றார். கொள்ளுப்பேத்தியின் பொறியியல் கல்லூரிக் கல்விக்குக் கட்டணம் கட்ட ஒரு கணிசமானத் தொகை அவசியத் தேவையானதால் வீட்டை விற்கலாமா என்ற யோசனையில் நின்று கொண்டிருந்தார்.

சிறிது நேரங்கழித்து தரகன் வந்தான். அடிமாட்டு விலைக்குப் பேரம் பேசினான். தன் பேரனிடம் கலந்தாலோசித்து விட்டுத் தகவல் தெரிவிப்பதாகக் கூறினார்.

ஏன் இந்த கிராமங்களெல்லாம் அழிந்து வருகின்றன…? தீப்பெட்டித் தொழிற்சாலைகளும், பட்டாசுத் தொழிற்சாலைகளும் முளைக்கின்ற பொழுது மனித நேயம் மட்டும் ஏன் முளைக்கவில்லை……? ஏன் இந்த சிதைவுகள்….?

இச்சிதைவுகள் பொருள் தேடலில் வேட்கை கொண்ட சுயநலமான மனிதர்களின் தலைவிதியைக் காட்டுகின்றன. அகத்தேடல் இல்லாததால் வாழ்வு இன்றும் ஆதிகாலம் போன்ற காட்டுமிராண்டி வாழ்வாகவே இருக்கிறது.

அங்கிருந்து நகர நகர அந்த வீடு தன்னுடைய நிஜப் பரிமாணத்திலிருந்து ஒரு சின்னப்புள்ளியாகிப் பெரியவரின் பார்வையில் பட்டது.

முற்றும்.

நன்றி:

முத்தமிழில் 2007ஆம் ஆண்டிற்கான இலக்கியச் சிறுகதைப்போட்டியில் முதல் பரிசு வென்ற கதை
2012 ஆம் ஆண்டின் பொங்கல் சிறப்பு மலரில் வெளியிட்டு சிறப்பித்த வல்லமை மின்னிதழ்.
http://www.vallamai.com/special/pongal/pongal-2012/1109/

Wednesday, November 28, 2012

Life Of Pi – ஒரு மீள்பார்வை



Life Of Pi ஒரு மீள்பார்வை


நேற்று நான் என்  சக நண்பர்களுடன் அருகிலிருக்கும்  திரையரங்கிற்குச் சென்று Life Of Pi காணச்சென்றேன். இதோ என் மீள்பார்வை.

சமீப காலங்களில் என் அபிமான இயக்குனர் அகிர குரசவாவின் பல உத்திகளை பல இயக்குனர்கள் தங்கள் படங்களில்  கையாண்டு தொடர்ந்து வெற்றியடைந்து கொண்டேவருவது அகிர குரசவாவின் வெற்றியே. Life of Pi என்ற இந்தத் திரைப்படத்திலும் அகிர குரசவாவின் Circular Techniqueஐப் பயன்படுத்தியிருக்கின்றார் இயக்குனர் ஆங் லீ.

படம், கதை சொல்லியின் பார்வையிலிருந்து நகர ஆரம்பிக்கின்றது.

கண்ணே ! கண்மணியே !என்ற பாடலுடன் தொடங்குகின்றது. Mychael Dannaவின் இசை லயமாய் இருக்கின்றது. கடல் பயணம் ஆரம்பிக்கும் வரை நிகழும் நிகழ்வுகள் பாண்டிச்சேரியில். ஆனால் அதுவரை நம் கலாச்சாரத்தினை முடிந்த அளவிற்கு இயக்குனர் படம் பிடித்துக்காட்டியிருக்கின்றார்.

கதாநாயகனின் பால்யபருவம். புதுச்சேரியில் வாசம். தந்தை மிருகக்காட்சி சாலை ஒன்றினை சொந்தமாக நிறுவினார். அவனது இயற்பெயரான Piscine Molitor Patel ஐ சக மாணவர்கள் கேலியும் கிண்டலுமாக அழைக்க தன் பெயரினை Pi என்றே அனைவரிடமும் விளிக்கிறான்.

சிறுவனுக்கு ஆன்மீகத்தில் நாட்டம். இந்துமதம் பிடிக்கின்றது. ஒரு முறை கிறித்தவ மதம். இன்னொரு முறை இஸ்லாம் என அனைத்து மதங்களுமே அவனைக் கவர்கின்றது. சிறுவனின் தந்தை, ‘நீ அப்படி எல்லா மதங்களையும் பின்பற்ற முடியாது…”

ஏன்…..?”  பை.

நீ ஒரு மதத்தினைப் பின்பற்றிக்கொண்டு இன்னொரு மதத்தினையும் பின்பற்றினால் முதலில் பின்பற்றிய மதத்தின் மீது நீ கொண்டிருக்கும் நம்பிக்கையையே அது சந்தேகப்படும்படியாகும்…”

அவன் சிறுவன்தானே…? அவனது தேடல் இப்பொழுதுதானே ஆரம்பித்திருக்கின்றதுதேடட்டும் இப்பொழுது அவனை சாப்பிட விடுங்கள்….” சிறுவனின் தாய் தபு.


ஒரு முறை தன் மிருகக்காட்சி சாலையில் புலிக்குத் தன் கையாலேயே உணவு தர முயற்சிக்கின்றான். சுவர்க்கூண்டிற்குள் அடைபட்டிருக்கும் புலி மெல்ல மெல்ல சிறுவனை நோக்கி வருகின்றது.  சிறுவனின் அண்ணன் எச்சரிக்கின்றான். புலியிடமும் அன்பு காட்ட முயல்கின்றான் சிறுவன். அண்ணன் அவ்விடத்தைவிட்டு அகன்று தந்தையை அழைத்துவருகின்றான்.

புலி இவனை எதோ ஒருவித கரிசனத்தில் பார்க்கின்றது. கம்பிகளின் வழியே சிறுவனின் கரத்திலிருக்கும் இறைச்சித் துண்டினை வாங்க முயலும்பொழுது தந்தை ஓடிவந்து புலியை விரட்டுகின்றார்.

புலியின் அடிப்படை குணம் கொல்வதுஅது கார்னிவெல்...உன் அன்பு அதற்குப் புரியாது… ’

ஆனால் அதன் கண்களின் அதன் ஆத்மாவைக் கண்டேனே டாடி….’ இந்த வசனம் க்ளாசிக்கலாக இருந்தது.

இதோ பார்…’ என ஒரு ஆட்டினைக் அங்கே கட்டிவைக்கபுலி ஆட்டினை ஒரே பாய்ச்சலாகக் கவ்வி ….

சிறுவன் இந்து மதத்தைச் சார்ந்தவன். சிறுவனுக்கு ஜீவகாருண்யத்தின் பால் அதிக நாட்டம். சுத்த மரக்கறி உண்பவனாய் இருக்கின்றான். தன் பதினாறாவது வயதினில் ஆனந்தியாக வரும் Shravanthi Sainath என்ற தன் வயதொத்த பெண்ணுடன் காதல் உணர்வுகள்.

சாப்பிடும்பொழுது தந்தை, மிருகக்காட்சி சாலையை நிரந்தரமாய் மூடிவிட்டு இந்த ஊரைக் காலிசெய்துவிட்டு வேறு நாட்டிற்குச் சென்று குடும்பத்துடன் வசிக்கப்போவதாய் அறிவிக்கின்றார்.

ஏன்…?’ என சிறுவன்.

கொலம்பஸ் போல வேற நாட்டைக் காணக் கெளம்பறோம்…”

கொலம்பஸ்ஸே இந்தியாவைத்தானே தேடினார்….?” சிறுவனின் இந்த பதில் செம்மட்டியாய் விழுந்தது.

கடல் பயணம் ஆரம்பம். கடல் புயலில் சிக்கி விபத்திற்குள்ளாகின்றது. இங்குதான் கதையே ஆரம்பிக்கின்றது. படம் முழுதும் தனியொரு மனிதனாய் எப்படி உயிர் பிழைக்கின்றான் என்ற போராட்டமே கதை.  இவனுக்குத் துணையாக இவனுடன்  நான்கு விலங்குகளும் உயிர்காக்கும் படகில் பயணிக்கின்றன. இறுதியில் பெங்கால் டைகரும்நம் கதாநாயகன் மட்டுமே உயிருடன்.

புலிக்கும் இவனுக்கும் ஒருவிதப் புரிதல். புலியுடன் தகவல் பரிமாற்றம் செய்யக் கற்றுக்கொள்கின்றான். எப்படியும் உயிர் பிழைப்போம் எனத் தனக்குத்தானே நம்பிக்கை ஊட்டிக்கொள்கின்றான். மீன் பிடிக்கும் கலையைக் கற்கின்றான். பசி ஒரு வெஜிட்டேரியனை நான் வெஜிட்டேரியனாய் மாற்றும் அந்தத் தருணம் அருமை. ஒவ்வொரு வெஜிட்டேரியனின் மனதினையும் மனதினுள் நடக்கும் போராட்டங்களையும் அழகாய் படம் பிடித்துக்காட்டுகின்றார்.

சோர்வில் தூங்கிவிடுகின்றான். படகும் இவன் தூங்கும் மரப்பலகைப் படுகையும் ஒரு தீவில் தட்டி நிற்கின்றது. அது ஒரு மிதக்கும் தீவு,  அங்கே தாவர உணவினை உண்கின்றான். சுத்தமான குடிநீருள்ள சிறிதாக ஒரு குளம். பாலூட்டி வகையைச் சேர்ந்த Mangoose குடும்பத்தைச் சேர்ந்த Meerkat வகை சின்ன சின்ன உயிரினங்கள். இரவினில் நீர் அமிலமாக மாறி, மீண்டும் பகலில் சுத்த நீராக மாறும் விந்தை.  ஒரு முறை மனிதப் பல்லினைக் கண்ணுறுகின்றான். அங்கிருக்கும் சில தாவரங்கள் விலங்கின்ங்களை உண்ணக்கூடிய ட்ரொஸீரா வகைத் தாவரங்கள் என அறிகின்றான். உடனே அந்தத் தீவைவிட்டு அகல்கின்றான் தன் புலியுடன்.

உயிர்காக்கும் படகு மெக்ஸிகோ கடற்கரையில் ஒதுங்குகின்றது. புலி இறங்கி அருகிலிருக்கும் காட்டிற்குள் நுழைகின்றது.  சிறுவன் சோர்வாகக் கரையிலேயே விழுந்து கிடக்கின்றான். பொதுமக்கள் அவனைத் தூக்கிக்கொண்டுச் செல்கின்றனர். அவன் ஓவென அழ ஆரம்பிக்கின்றான்.  புலியைவிட்டுப் பிரியும் அந்த வலி யாருக்கும் புரிபடவில்லை.

காப்பீட்டு நிறுவன அதிகாரிகள் இவனை விசாரிக்கின்றனர். இவன் நடந்த உண்மைகளைச் சொல்கின்றான். அதிகாரிகள் நம்ப மறுக்கின்றனர். மிரட்டும் தொணியில் பேசுகின்றனர்.

சிறுவன் அவர்கள் நம்பும்விதமாக இதே சம்பவங்களை வைத்து இன்னொரு கதையைச் சித்தரிக்கின்றான். அதிகாரிகள் இப்பொழுது நம்புகின்றனர்.

இந்தப் படம் 2000ல் வெளிவந்த CAST AWAY என்ற திரைப்படத்தினை ஏனோ நினைவுபடுத்துகின்றது.

இந்தப்படம் Yann Martel என்ற கனடா தேசத்து எழுத்தாளரால் Life Of Pi என்ற நாவல் எழுதி, பல முறை பதிப்பாளர்கள் நிராகரித்து இறுதியில் செப்டம்பர் 2001ல் Random House Canadaவினால் வெளியிடப்பட்டு பல பரிசுகளை அள்ளியது. UK பதிப்பு Man Booker Prize for Fiction என்ற விருதினை அள்ளியது.  South African Award, மற்றும் Asian/Pacific American Award for Literature போன்ற பல விருதுகளை அள்ளிய ஒரு நாவல்.